rfxsignals May 15, 2020 No Comments

‘மாஸ்டர்’ வெளியீட்டுத் தேதிக்கு காத்திருக்கும் தமிழ்த் திரையுலகம்

 

master-release-plan

 

விஜய் நடிப்பில் உருவாகிவரும் ‘மாஸ்டர்’ படத்தின் வெளியீட்டுக்குத் தேதிக்காக தமிழ்த் திரையுலகினர் காத்திருக்கிறார்கள்.

 

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடிப்பில் உருவாகியுள்ள படம் ‘மாஸ்டர்’. ஏப்ரல் 9-ம் தேதி வெளியாகியிருக்க வேண்டிய படம் கரோனா ஊரடங்கால் தள்ளி வைக்கப்பட்டுள்ளது. தற்போது இறுதிக்கட்டப் பணிகளைத் தொடங்க தமிழக அரசு அனுமதியளித்துள்ளதால், ‘மாஸ்டர்’ படத்தின் இறுதிக்கட்டப் பணிகள் தொடங்கி நடைபெற்று வருகின்றன. இன்னும் படத்தின் முதல் பிரதி தயாராகவில்லை.

 

இதனிடையே, கரோனா ஊரடங்கு முடிந்து எப்போது திரையரங்குகள் திறக்கும் என்பது தெரியாமல் இருக்கிறது. திரையரங்குகள் திறப்பது தொடர்பாக இதுவரை எந்தவொரு பேச்சுவார்த்தையுமே நடைபெறவில்லை. தற்போதுள்ள சூழல் மற்றும் படங்கள் வெளியீடு உள்ளிட்டவை தொடர்பாக சிலரிடம் விசாரித்தோம்.

விநியோகஸ்தர்கள் மற்றும் திரையரங்கு உரிமையாளர்கள் என அனைவருமே ‘மாஸ்டர்’ படத்தின் வெளியீட்டுக்குத்தான் காத்திருக்கிறார்கள். ஏனென்றால், திரையரங்குகள் திறக்கப்பட்டாலும் வழக்கமான மக்கள் கூட்டம் இருக்குமா என்பது சந்தேகம்தான். ஆகையால் ‘மாஸ்டர்’ வெளியானால் மட்டுமே மக்கள் மீண்டும் திரையரங்குகளுக்கு வருவார்கள் எனக் கருதுகிறார்கள் திரையரங்க உரிமையாளர்கள்.

மேலும்,விஜய் படம் வெளியானால் முதல் நாள் வசூல் என்பது ரூ.30 கோடிக்கும் அதிகமாக இருக்கும். ‘மாஸ்டர்’ படம் வெளியாகி முதல் நாளில் இதே அளவுக்கு வசூல் செய்துவிட்டால், மக்கள் திரையரங்கிற்கு வரத் தயாராகிவிட்டார்கள் எனக் கருதி மற்ற படங்கள் வெளியீட்டுக்குத் தயாராகும் என நினைக்கிறார்கள் விநியோகஸ்தர்கள்.

இதனால் ஒட்டுமொத்தத் திரையுலகமுமே ‘மாஸ்டர்’ படத்தின் வெளியீட்டுக்குத்தான் காத்திருப்பதாகச் சொல்கிறார்கள். ‘மாஸ்டர்’ படக்குழுவினரோ இறுதிக்கட்டப் பணிகளை முடித்துவிட்டாலும், தீபாவளிக்கு வரலாம் என்ற ஆலோசனையில் இறங்கியுள்ளனர். அதற்கு முன்னதாக திரையரங்குகள் திறப்பு தொடர்பான அறிவிப்பு வரட்டும் எனக் காத்திருக்கிறார்கள்.

‘மாஸ்டர்’ படத்தில் என்ன பணிகள் இன்னும் முடிக்கப்படாமல் உள்ளன என்று விசாரித்தபோது, “கிராபிக்ஸ் காட்சிகள் இன்னும் இறுதிக்கட்டத்தை எட்டவில்லை. அவை முடிந்தவுடன் அனைத்தையும் ஒன்றிணைந்து முதல் பிரதி எடுக்க வேண்டும்” என்று தெரிவித்தார்கள்