rfxsignals July 29, 2020 No Comments

இந்திய விமானப் படையில் இணைவதற்காக முதல்கட்டமாக 5 ரபேல் போர் விமானங்கள் இன்று இந்தியா வந்து சேருகின்றன.

Rafale Jets at Ambala

Rafale Jets at Ambala
இந்தியா – பிரான்ஸ் இடையே 2016ஆம் ஆண்டு ரபேல் போர் விமானங்கள் வாங்குவது தொடர்பாக கையெழுத்திடப்பட்டது. மொத்தம் 36 ரபேல் போர் விமானங்கள் வாங்க ரூ.60 ஆயிரம் கோடிக்கு ஒப்பந்தம் போடப்பட்டது. இதனை பல்வேறு கட்டங்களாக தயாரித்து வழங்க பிரான்ஸின்

டசால்ட் நிறுவனம் சம்மதம் தெரிவித்தது. இதில் 30 போர் விமானங்கள் மற்றும் 6 பயிற்சி விமானங்கள் அடங்கும். இந்த சூழலில் முதல் 10 விமானங்களின் தயாரிப்பு பணிகள் நிறைவு பெற்றன. இதனை முறைப்படி பெற்றுக் கொள்ள, கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் பிரான்ஸ் சென்றிருந்தார்.

அங்கு ரபேல் போர் விமானங்களுக்கு பூஜைகள் செய்யப்பட்டன. இந்த 10 விமானங்களில் 5 ரபேல் போர் விமானங்கள் பயிற்சிக்காக பிரான்சிலேயே வைக்கப்பட்டுள்ளன. மீதமுள்ள 5 விமானங்கள் இன்று இந்தியா வருகின்றன. இதில் மூன்றில் ஒரேவொரு இருக்கையும், இரண்டில் 2 இருக்கைகளும் இடம்பெற்றுள்ளன. இந்த விமானங்களை இயக்க இந்திய விமானப்படை வீரர்களுக்கு சிறப்பு பயிற்சி அளிக்கப்பட்டுள்ளது.

அவர்கள் பிரான்ஸில் இருந்து ரபேல் போர் விமானங்களை இந்தியாவிற்கு கொண்டு வருகின்றனர். வரும் வழியில் வானிலேயே எரிபொருள் நிரப்பப்பட்டது குறிப்பிடத்தக்கது. இதுதொடர்பான புகைப்படங்களை இந்திய விமானப்படை தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டிருந்தது. ரபேல் போர் விமானங்கள் ஹரியானா மாநிலத்தில் உள்ள

அம்பாலா விமானப்படை தளத்தில் இன்று மாலை தரையிறங்குகின்றன.

இதையொட்டி அம்பாலாவை சுற்றியுள்ள 4 கிராமங்களில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. அங்கு வேறெந்த விமானங்களும் வானில் பறக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. ரபேல் போர் விமானங்கள் தரையிறங்கும் போது பொதுமக்கள் கூடவோ அல்லது புகைப்படங்கள் எடுக்கவோ தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்திய வானிலை மையம் வெளியிட்டுள்ள தகவலின்படி, அம்பாலாவில் இன்று வானம் மேகமூட்டமாக காணப்படும்.

லேசான அல்லது இடியுடன் கூடிய மழை பெய்ய வாய்ப்புள்ளது. எனவே விமானங்களை தரையிறக்க வானிலை ஒத்துழைக்கவில்லை எனில், ஜோத்பூர் விமானப்படை தளத்தில் தரையிறக்க திட்டமிடப்பட்டுள்ளது. அடுத்த ஆண்டு இறுதிக்குள் 36 ரபேல் போர் விமானங்களும் இந்திய விமானப்படையில் இணையும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.