நடிகையின் பசி போக்க உதவிய மேக்-அப் மேன்
இந்தி தொலைக்காட்சி தொடர்களில் நடித்து வருகிறவர் சோனால் வெங்குர்லேகர். ஏ தேரி கலியான் தொடர் மூலம் புகழ் பெற்ற அவர் யே வாதா ராகா, சாஸ்திரி சிஸ்டர்ஸ், தேவ், லால் இஷாக், யே தேறி கலியான், அலெக்மி உள்ளிட்ட பல தொடர்களில் நடித்துள்ளார்.
சோனால் தற்போது கொரோனா ஊரடங்கில் வீட்டில் முடங்கியுள்ளார். படப்பிடிப்பு எதுவும் இல்லாததால் பெரும் பணப் பிரச்சினையில் சிக்கியுள்ளார். சாப்பாட்டு செலவுக்கு வழியில்லாமல் தவித்த அவருக்கு அவரது மேக்அப் மேன் 15 ஆயிரம் கொடுத்து உதவி உள்ளார். இதுகுறித்து சோனால் தனது இன்ஸ்ட்ராகிராம் பக்கத்தில் எழுதியிருப்பதாவது:
எனக்கு பணம் தர வேண்டிய தயாரிப்பாளர் நீண்ட காலமாக பணத்தை கொடுக்காமல் இழுத்தடிக்கிறார்கள். அதனால் அடுத்த மாத செலவுக்கு காசு இல்லை என்று என் மேக்கப் மேனிடம் கூறினேன். அவரின் மனைவி வேறு கர்ப்பமாக உள்ளார், அதனால் பல செலவுகள் இருக்குமே என்று எனக்கு அவரை நினைத்து கவலையாக இருந்தது.
என் மேக்கப் மேன் எனக்கு அனுப்பிய மெசேஜை நான் எதிர்பார்க்கவே இல்லை. அந்த மெசேஜை பார்த்து என் கண்களில் கண்ணீர் வந்துவிட்டது. மேடம் என்னிடம் ரூ. 15 ஆயிரம் உள்ளது. உங்களுக்கு தேவை என்றால் அதை பெற்றுக் கொள்ளுங்கள். என் மனைவிக்கு பிரசவம் ஆகும் நேரம் திருப்பிக் கொடுத்தால் போதும் என்று அவர் தெரிவித்தார்.
எனக்கு லட்சக் கணக்கில் பணம் தர வேண்டியவர்கள் நான் போன் செய்தால் அட்டென்ட் செய்வது இல்லை. மேலும் என் எண்ணை பிளாக் செய்வதுடன் நான் கஷ்டப்பட்டு சம்பாதித்த பணத்தை எனக்கு கொடுக்க அவர்கள் தயாராக இல்லை.என் மேக்கப் மேன் பங்கஜ் குப்தாவை என் குடும்பத்தில் ஒருவராக நினைக்கிறேன். அவர் கொடுத்த பணம் பெரிய விஷயம் அல்ல. அவர் என்னை பற்றி நினைத்தது தான் பெரிய விஷயம் என்று தெரிவித்துள்ளார்.