rfxsignals May 22, 2020 No Comments

திருப்பூர் மாவட்ட ஆட்சியரை பாராட்டிய நடிகர் சிவகார்த்திகேயன்!

 

 

 

திருப்பூர் மாவட்டத்தில் 114 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டிருந்தனர். இதன் பின்னர் ஒவ்வொருவராக குணமடைந்து, தற்போது 114 பேரும் குணமடைந்து கொரோனா தொற்று இல்லாத மாவட்டமாக திருப்பூர் மாவட்டம் இருந்து வருகிறது. இதற்கு மாவட்ட நிர்வாகம் முக்கிய பங்காற்றி வருகிறது. அதற்கு திருப்பூர் மாவட்ட கலெக்டர் விஜயகார்த்திகேயனின் நடவடிக்கைகளும் குறிப்பிடத்தக்கது.

திருப்பூர் கலெக்டர் கொரோனா தடுப்பு நடவடிக்கையாக சமூக இடைவெளியை பொதுமக்கள் பின்பற்ற வேண்டும் என்ற விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில், குடைபிடிக்க வேண்டும் என திருப்பூர் மாவட்ட மக்களுக்கு சவால்களை விடுத்தார். இதுபோல் சமூக வலைதளங்களான முகநூல், வாட்ஸ்-அப், டுவிட்டர் போன்றவற்றில் விழிப்புணர்வு பதிவுகள் மற்றும் பொதுமக்களுக்கு அறிவுரைகளை வழங்கி வருகிறார். இது பலரையும் கவர்ந்து வருகிறது.

கொரோனா தடுப்பு பணியில் சிறப்பாக செயல்பட்டு வரும் கலெக்டர் விஜயகார்த்திகேயனை, நடிகர் சிவகார்த்திகேயன் டுவிட்டரில் பாராட்டியுள்ளார். அதன்படி கலெக்டர் தனது டுவிட்டர் பதிவில் திருப்பூர் மாவட்டத்தின் கொரோனா நிலவரம் குறித்து பதிவு செய்திருந்தார். அதனை பார்த்த நடிகர் சிவகார்த்திகேயன், இது போன்று தொடர்ந்து பணியாற்றுங்கள். நாம் ஒவ்வொருவரும் இது போன்று பணியாற்ற வேண்டும். நீங்கள் இதற்கு தகுதியானவர். பாராட்டுக்குறியவர் என்று குறிப்பிட்டுள்ளார்.

இதற்கு கலெக்டர் விஜயகார்த்திகேயன் டுவிட்டரில் அளித்த பதிலில், நன்றி சகோதரர். கொரோனா தடுப்பு பணியில் ஒரு தடவை ஜெயிச்சா பத்தாது!, ஒவ்வொரு தடவையும் ஜெயிக்கணும்! ஜெயிப்போம் என்று குறிப்பிட்டுள்ளார். இந்த பதிலில் உள்ள வசனம் சிவகார்த்திகேயன் நடித்த ஒரு படத்தில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.