நேரடியாக டிஜிட்டல் ரிலீசுக்கு தயாராகும் அனுஷ்கா படம்?
ஜோதிகா, கீர்த்தி சுரேஷை தொடர்ந்து அனுஷ்காவின் படமும் தியேட்டருக்கு பதிலாக நேரடியாக டிஜிட்டல் தளத்தில் வெளியாக உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
கொரோனா ஊரடங்கினால் திரையரங்குகள் மூடிக்கிடக்கின்றன. இதனால் தியேட்டருக்கு பதிலாக இணையதளத்தில் நேரடியாக புதிய படங்களை ரிலீஸ் செய்ய ஆரம்பித்துள்ளனர். ஜோதிகா நடித்துள்ள ‘பொன்மகள் வந்தாள்’ படம் வருகிற 29-ந்தேதி இணையதளத்தில் ரிலீஸ் ஆகிறது. இதற்கு தியேட்டர் அதிபர்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
தொடர்ந்து கீர்த்தி சுரேஷ் நடித்துள்ள ‘பெண்குயின்’ படமும் நேரடியாக இணையதளத்தில் அடுத்த மாதம் 19-ந்தேதி வெளியாகிறது. இரண்டு பெரிய நடிகைகள் படங்கள் டிஜிட்டல் தளத்தில் வெளியாவது பட உலகில் பரபரப்பை ஏற்படுத்தியது.
இந்த நிலையில் நடிகை அனுஷ்கா நடித்துள்ள ‘நிசப்தம்’ படத்தையும் தமிழ், தெலுங்கு, இந்தி, மலையாள மொழிகளில் இணைய தளத்தில் வெளியிட தயாராகிறார்கள். இதில் மாதவன், மைக்கேல், அஞ்சலி, ஷாலினி பாண்டே ஆகியோரும் நடித்துள்ளனர். ஹேமந்த் மதுக்கூர் இயக்கி உள்ளார். இதன் படப்பிடிப்பு சில மாதங்களுக்கு முன்பே முடிந்து விட்டது.
ஜனவரி 31-ந்தேதி வெளியாகும் என்று அறிவித்து பின்னர் பிப்ரவரிக்கு தள்ளி வைத்தனர். அதன்பிறகு ஏப்ரல் மாதம் வரும் என்றனர். கொரோனா ஊரடங்கினால் 3-வது தடவையும் வெளியாகவில்லை. இதனால் ‘நிசப்தம்’ படத்தை இணையதளத்தில் வெளியிட பேச்சுவார்த்தை நடப்பதாக படக் குழுவினர் தெரிவித்துள்ளனர்.