மாற்றங்கள் தரும் வலிகள் பழகக்கூடும் : பிரியா பவானி சங்கர்
சின்னத்திரையில் இருந்து பெரிய திரைக்கு வந்தவர் பிரியா பவானி சங்கர். மேயாதமான் படத்தில் அறிமுகமான அவர் அதன்பிறகு கடைக்குட்டி சிங்கம், மான்ஸ்டர், மாபியா படங்களில் நடித்தார். தற்போது இந்தியன் 2, கசட தபற, குருதி ஆட்டம், பொம்மை உள்பட பல படங்களில் பிசியாக நடிக்கிறார்.
இந்த நிலையில் பிரியா பவானி சங்கர், கடந்த பவுர்ணமி அன்று தனது இன்ஸ்ட்ராகிராமில் நீண்ட பதிவொன்றை வெளியிட்டுள்ளார்.
அதில், போன வருஷம் இதே நாள், ‘கிரிவலம் போனா, மூனு மாசத்துல வேண்டிக்கிட்டத கடவுள் கண்டிப்பா குடுப்பார்’னு நண்பர்கள், சொன்னத நம்பி மனசு நிறைய ஒரே வேண்டுதல சுமந்துகிட்டு இரவோட இரவா பௌர்ணமிய தொரத்திக்கிட்டு திருவண்ணாமலை போனேன்.
கடவுள் கேட்டத குடுக்கலனாலும் பரவாயில்லை கிழித்து என் முகத்துலயே எறிந்து கை தட்டி சிரித்தார். ஒரு வருஷம் எப்படி போச்சுன்னே தெரியல. மனிதர்களையும் அவர் குணங்களையும் நாம் பிடிவாதமாக பார்க்க மறுத்த கோணத்தில் காலம் காட்டியது. ரெண்டு சித்ரா பௌர்ணமிக்கு இடையே வாழ்க்கை மட்டுமில்ல உலகமே மாறிடுச்சு.
நான் மட்டும் இல்ல, உலகமே தனிமையில். ஏனோ கிடைத்த கைகளை பற்றிக்கொண்டு கிடைத்த தோளில் ஒட்டிக்கொண்டு அவசரவசரமாக அடுத்த வாழ்க்கைக்கு தயாராக இந்த தனிமை தூண்டவில்லை. தனிமையில் நிற்க நமக்கு ஏன் இவ்வளவு பயம்? பதற்றம்?
கேட்டதை தராமல் நல்லதை தந்த கடவுள் மேலயும், சித்ரா பௌர்ணமி மேலயும் கோவம் குறைஞ்சு தனிமையின் வெளிச்சத்தில் நிதானமாக தெளிவாக, எந்த எதிர்ப்பும் இன்றி, கிடைத்ததே என்று எந்த பிடிப்புமின்றி நான். கிரிவலம் போகாமல், முன் எப்பொழுதையும் விட அமைதியாக தனிமையின் கம்பீரத்தோடு என் வீட்டு மாடியில் சித்ரா பௌர்ணமி.
மாற்றங்கள் தரும் வலிகள் பழகக்கூடும், வலித்து மரத்து அடங்கிய பின் வரும் தெளிவு அழகு.
இவ்வாறு அவர் எழுதியிருக்கிறார்.