விஸ்வாசம் படத்தில் சில காட்சிகளைப் படமாக்கிய அஜித்
அஜித் – சிவா ஆகிய இருவரும் மீண்டும் இணைந்துள்ள படம் – விஸ்வாசம். கதாநாயகியாக நயன்தாரா நடித்துள்ளார். சத்யஜோதி ஃபிலிம்ஸ் தயாரித்த இப்படத்தில் ஜகபதி பாபு, விவேக், யோகி பாபு, ரோபோ சங்கர், தம்பி ராமையா, கோவை சரளா போன்றோரும் நடித்துள்ளார்கள். இப்படத்துக்கு இசை – இமான், ஒளிப்பதிவு – வெற்றி.
இந்தப் படம் கடந்த வருடம் ஜனவரி 10-ம் தேதி வெளியானது. அமேசான் பிரைமில் பிப்ரவரி 25 அன்று வெளியானது. இந்நிலையில் இப்படம் பற்றி தெரியாத ஒரு தகவலை அமேசான் பிரைம் தெரிவித்துள்ளது. படத்தில் டைட்டில் கார்டு இடம்பெறும்போது அதில் பயன்படுத்தப்பட்ட சில டிரோன் காட்சிகளை அஜித்தே படமாக்கியதாக அமேசான் பிரைம் தெரிவித்துள்ளது.
தயாரிப்பாளர்களின் பெயர்கள் வரும்போது இடம்பெற்ற காட்சியை அஜித் படமாக்கியதாகவும் தெரிவித்துள்ளது. அஜித், டிரோனை இயக்கும் புகைப்படமும் வெளியாகியுள்ளது. சிறுவயதிலிருந்தே ஏரோ மாடலிங்கில் விருப்பம் உள்ளவர் நடிகர் அஜித். கையில் ரிமோட் கண்ட்ரோல் வைத்து, சிறிய ரக விமானங்களை இயக்குவதிலும், சோதனை செய்வதிலும் ஆர்வம் உள்ளவர்.
இதன்மூலமாகவே படப்பிடிப்பு இல்லாத நேரங்களில் இவர் தனது பொழுதைக் கழித்தார் என்பது அவரது ரசிகர்களுக்கு நன்றாகவே தெரியும். அதனால் தான் தொழில் நுட்பக் கல்லூரியான மெட்ராஸ் இன்ஸ்டியூட் ஆஃப் டெக்னாலஜி (எம்.ஐ.டி.) நிர்வாகம் அழைத்தபோது விருப்பத்துடன் அதை ஏற்றுக் கொண்டார். ஆஸ்திரேலியாவின் குயின்ஸ்லாந்தில் நடைபெற்ற மிகவும் புகழ்பெற்ற “மெடிக்கல் எக்ஸ்பிரஸ் – 2018 யுஏவி சேலஞ்ச்’ எனும் போட்டியில் எம்.ஐ.டி வெற்றி பெற வேண்டும் என்பதற்காக நடிகர் அஜித், டீம் தக்ஷா குழுவினரின் ஆலோசகராக நியமிக்கப்பட்டார்.
அப்போட்டியின் இறுதிச் சுற்றில் தக்ஷா குழுவினர் 2-ம் இடம் பிடித்தார்கள். இந்தப் போட்டியில் 100 நாடுகள் பங்கு கொண்டன.